வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் போராட்டம்

சேவூரில் அடிப்படை வசதிகளை செய்து தராத வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2017-10-02 22:15 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேவூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் நேற்று சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து காட்பாடி தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) கதிரவன் கிராம சபை கூட்டத்தை நடத்த நேற்று காலை சேவூர் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஊராட்சி செயலாளர் கருணாகரன் கிராம சபை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது அங்கு வந்த பொதுமக்கள் சேவூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. கொசுமருந்து தெளிக்கப்படவில்லை இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சத்தியபுரம், கருணாநகர் ரவுண்டு டேபிள், கிறிஸ்துவ காலனி ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் இரவில் வெளிச்சம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

குடிநீர் பிரச்சினை

சேவூருக்கு குடிநீர் வினியோகிக்கும் கிணற்றில் தனியார் மருத்துவமனையின் கழிவுநீர் கலப்பதால் குடிநீரில் கிருமிகள் கலக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பல இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்பட நோய்கள் வந்து சிரமப்படுகின்றனர்.

ஊராட்சியில் பணியாற்றும் குடிநீர் ஆபரேட்டர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்களும் பணி செய்ய மாட்டோம் என தெரிவிக்கின்றனர். குடிநீர் மோட்டாரும் அவ்வப்போது பழுதாகி விடுவதால் அதை உடனடியாக பழுது பார்க்காததால் குடிநீர் பிரச்சினையும் ஊராட்சியில் நிலவுகிறது. இதுகுறித்து கிராம ஊராட்சிகளை கவனிக்கும் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழா அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டார். அப்போது அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை வைத்தோம். கலெக்டரும் உடனடியாக செய்வதாக கூறினார். கலெக்டர் உத்தரவையும் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை.

புறக்கணித்து போராட்டம்

மேலும் கடந்த சில மாதங்களாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் செய்ய வேண்டிய 100 நாள் வேலை பணிகளும் நடைபெறவில்லை.

எனவே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தராமல் அலட்சியம் காட்டும் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சிகள்) கண்டித்து கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் சேவூர் ஊராட்சி அலுவலகத்திற்கு வெளியே நின்று அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கோஷம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்