மதுரையில் துணிகரம்: ஆசிரியர் தம்பதி வீட்டில் 52 பவுன் நகைகள், பணம் கொள்ளை

கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது ஆசிரியர் தம்பதி வீட்டில் 52 பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2017-10-02 23:15 GMT
மதுரை,

மதுரை காளவாசல் பாண்டியன் நகர், ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் ஆரோக்கியதாஸ் (வயது 42), காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகந்தி, மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி ஆல்பர்ட் ஆரோக்கிய தாஸ் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அவர் சுற்றுலா சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார்.

52 பவுன் நகைகள் கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 52 பவுன் நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

மேலும் ஆல்பர்ட் ஆரோக்கியதாஸ் வீட்டின் அருகே உள்ள இரும்பு பட்டறையின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பெட்டியில் வைத்திருந்த 6 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது. தகவல் அறிந்த கரிமேடு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் 2 சம்பவங்களில் பதிவான கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்