குடிபோதையில் கணவர் கொடுமை - மகள்–2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு பெண் தற்கொலை

கலபுரகி அருகே குடிபோதையில் கணவர் கொடுமைப்படுத்தியதால் மகள்–2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்ற பெண், தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-10-02 23:00 GMT

பெங்களூரு,

கலபுரகி மாவட்டம் ஹடகில் கிராமத்தில் வசித்து வருபவர் பசவராஜ் (வயது 45). இவருடைய மனைவி ஜெயஸ்ரீ (40). இந்த தம்பதிக்கு பவித்ரா (12) என்ற மகளும், சுனில் (10), அனில் (5) என்ற மகன்களும் இருந்தனர். இந்த நிலையில், பசவராஜூவுக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து ஜெயஸ்ரீயிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்து கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், குடும்பம் நடத்துவதற்கு பணம் எதையும் பசவராஜ், ஜெயஸ்ரீயிடம் கொடுப்பது இல்லை என தெரிகிறது. இதனால், ஜெயஸ்ரீ மனம் உடைந்து காணப்பட்டார். மேலும், தனது கணவருடன் வாழ பிடிக்காத அவர் தனது மகள் மற்றும் மகன்களுடன் தாய் வீட்டுக்கு சென்றார்.

இருப்பினும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்ட அவர் தனது மகள், மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் மாலையில் ஹடகல் புறநகரில் உள்ள கிணற்றில் பவித்ரா, சுனில், அனில் ஆகியோரை ஜெயஸ்ரீ தள்ளினார். நீச்சல் தெரியாத அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

அதனைத்தொடர்ந்து, ஜெயஸ்ரீயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பரஹதாபாத் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இருந்து ஜெயஸ்ரீ உள்பட 4 பேரின் உடல்களை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. இந்த மீட்பு பணி நேற்றும் தொடர்ந்தது. அப்போது, 4 பேரின் உடல்களையும் கிணற்றில் இருந்து மீட்டு தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் போலீசார் வெளியே கொண்டு வந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, பரஹதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்