ரெயில்வே மேம்பாலம் பணி பாதியில் நிறுத்தம்: பொதுமக்கள் சாலை மறியல்

ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை பாதியில் நிறுத்தியதை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-10-02 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சியில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர்.

அப்போது அவர்கள், ‘‘வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரூ.17 கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தூண்கள் அமைக்கப்பட்டதுடன் பாதியில் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வேப்பம்பட்டு பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 30–க்கும் மேற்பட்டோர் ரெயிலில் அடிபட்டு இறந்து உள்ளனர். எனவே ரெயில்வே மேம்பால பணியை பாதியில் நிறுத்தியதை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக’’ தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள், ரெயில்வே மேம்பால பணியை மீண்டும் தொடங்கி, விரைந்து முடிக்க வலியுறுத்தி வேப்பம்பட்டு பகுதியில் திருவள்ளூர்–ஆவடி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரெயில்வே மேம்பால பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்