டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் புகார் கூறி வந்தனர்.
இந்தநிலையில் புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டனர். மற்ற நோயாளிகளுடன் சேர்த்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவ அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவை மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலை கண்டறியும் ரத்த பரிசோதனை கருவி பழுதடைந்துள்ளது. அங்கு செல்லும் நோயாளிகள் அனைவரும் புதுவை அரசு மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டு இல்லை. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.