திருமணமான சில நாட்களில் வீட்டிலிருந்து மாயமான இளம்பெண் கொடூர கொலை
திருமணமான சில நாட்களில் வீட்டிலிருந்து மாயமான இளம்பெண் கள்ளக்காதலனுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.;
சிவமொக்கா,
சிவமொக்கா டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரேவதி. இவர்கள் 2 பேருக்கும் கடந்த மாதம்(செப்டம்பர்) 4–ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரேவதி வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து கார்த்திக் துங்கா நகர் போலீசில் புகார் செய்தார்.
அதில் தனது மனைவியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறியிருந்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் சிவமொக்கா டவுனையொட்டிய ஒட்டேனகொப்பா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியின் பின்புறம் ஓடும் கால்வாயில் ஒரு ஆணும், பெண்ணும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களது உடலில் அரிவாளால் பயங்கரமாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.இருவரது முகங்களும் சிதைக்கப்பட்டு இருந்தன. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி துங்கா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
அதாவது, கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் காணாமல் போன ரேவதி என்பதும், அவருடன் கொலையாகி கிடந்தது அவருடைய கள்ளக்காதலன் விஜய் என்பதும் தெரியவந்தது. மேலும், ரேவதிக்கு கார்த்திக்குடன் திருமணம் ஆவதற்கு முன்பே விஜயுடன் தொடர்பு இருந்துள்ளது.திருமணத்திற்கு பின்னரும் இவர்களது தொடர்பு நீடித்துள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான் ரேவதி திடீரென வீட்டிலிருந்து மாயமாகி உள்ளார்.
தற்போது ரேவதியும், அவருடைய கள்ளக்காதலனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதனால் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ரேவதியையும், அவருடைய கள்ளக்காதலனையும் கார்த்திக் அரிவாளால் வெட்டி கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் அவர்களை கொன்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதற்கிடையே ரேவதி மற்றும் விஜயின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். திருமணமான சில நாட்களில் வீட்டிலிருந்து மாயமான இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் கொலையாகி கிடந்த சம்பவம் நேற்று சிவமொக்கா டவுனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.