சிக்கமகளூருவில் கனமழை எதிரொலி: கல்லத்தி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

சிக்கமகளூருவில் பெய்து வரும் கனமழையால் கல்லத்தி அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.;

Update: 2017-10-01 22:45 GMT

சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வானுயர்ந்த மலைகளால் சூழ்ந்து காணப்பட்டுள்ள சிக்கமகளூருவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழை காரணமாக சிக்கமகளூருவில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மலை வாசஸ்தலமான சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி, முள்ளயங்கிரி, ஒன்னம்மன் அருவி, கல்லத்தி அருவி, கெம்மன்குந்தி உள்பட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

தற்போது சிக்கமகளூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒன்னம்மன் அருவி, கல்லத்தி அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கல்லத்தி அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஏனெனில், இந்த அருவியையொட்டி வீரபத்ரேஸ்வரா–கல்லத்தி புரதம்மா கோவில்கள் அமைந்துள்ளது. இதனால், சிக்கமகளூருவுக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள், கல்லத்தி அருவியை தான் முதலில் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வந்துள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கமகளூருவுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி சுற்றுலா பயணிகள் வீரபத்ரேஸ்வரா–கல்லத்தி புரதம்மா கோவிலில் தரிசனம் செய்துவிட்டு கல்லத்தி அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று கல்லத்தி அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து உள்ளது. சுற்றுலா பயணிகள் சிக்கமகளூரு மற்றும் அதனை சுற்றியுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இதனால், சிக்கமகளூரு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. தொடர் விடுமுறையை முன்கூட்டியே அறிந்த சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி அறைகளை முன்பதிவு செய்துவிட்டனர்.

ஆனால், முன்கூட்டியே திட்டமிடாத சுற்றுலா பயணிகள், தங்கும் விடுதி அறைகள் கிடைக்காமல் பரிதவித்தனர். அவர்கள், தாங்கள் வந்த வாகனங்களிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. சிக்கமகளூரு டவுன் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் முன்பு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால், அங்கு பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் தாங்கள் வந்த வாகனங்களை விடுதிகள் முன்பு நிறுத்தியிருந்தனர். இதனால் சிக்கமகளூருவில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிக்கமகளூருவில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்ததால், பாபாபுடன்கிரி, முள்ளயங்கிரி, கெம்மன்குந்தி ஆகிய மலைப்பகுதியில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து சென்றன. மலைப்பகுதியில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு இடம் இருப்பதால், வாகனங்கள் மேலே செல்லவும், கீழே இறங்கவும் இடையூறாக இருந்தது.

ஒரு வாகனத்துக்கு வழிவிட மற்ற வாகனங்கள் நீண்ட தூரம் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதங்களும் நடந்தது. நேற்றைய தினம் பாபாபுடன்கிரி மலைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மழையும் பெய்து கொண்டிருந்ததால், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளேயே மலைப்பகுதிக்கு சென்று வந்தனர். பலர், மலைகள் நடுவே மழை பெய்வதை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

மேலும் நவராத்திரியையொட்டி சிருங்கேரியில் உள்ள சாரதம்மா கோவில், ஹெரநாடு அன்னப்பூர்னேஸ்வரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய சுற்றுலாத்தலங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக சிக்கமகளூருவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால், சிக்கமகளூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. மேலும், முன்பதிவு செய்யப்படாத விடுதி அறைகளுக்கான கட்டணம் 2 மடங்கு அதிகமாக விதிக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்திகுள்ளாகினர். விடுதி அறை கிடைக்காதவர்கள் பலர், தாங்கள் வந்த வாகனங்களிலேயே தங்கினர். கொஞ்சம் சிலர், சிக்கமகளூருவில் உள்ள பல்வேறு வீடுகளில் தங்கினார்கள். அவர்கள், வீடுகளில் தங்கியதற்கான வாடகையையும் உரிமையாளர்களிடம் கொடுத்தனர். தங்கும் விடுதியை விட வீடுகளில் வாடகை குறைவாக இருந்ததாகவும், வீடுகளில் இருந்தவர்கள் தங்களை நன்கு உபசரித்ததாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்