ஹெலிகாப்டரில் கழுகு மோதி கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

மைசூருவில், ஹெலி ரைடின்போது ஹெலிகாப்டரில் கழுகு மோதி கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பைலட் அவசர, அவசரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கியதால் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2017-10-01 22:30 GMT

மைசூரு,

உலகப்புகழ் பெற்ற தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 21–ந் தேதி தொடங்கி 30–ந் தேதி வரை நடந்தது. தசரா விழாவையொட்டி மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டது. மேலும் தசரா விழாவையொட்டி மைசூரு நகரின் அழகை காண்பதற்காக ‘ஹெலி ரைடு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கடந்த மாதம் 16–ந் தேதி தொடங்கியது. வருகிற 5–ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த திட்டத்தில் 2 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுழற்சி முறையில் 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 6 பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யக்கூடிய இந்த ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலாப் பயணிகள் பறந்து மைசூருவின் அழகை சுற்றிப்பார்க்கலாம். இதற்காக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் ‘ஹெலி ரைடு’ மேற்கொள்வதற்காக 6 சுற்றுலா பயணிகள் மைசூரு லலிதா மஹால் அரண்மனை ஹெலிபேடு மைதானத்திற்கு வந்தனர். அவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பைலட், ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அந்த ஹெலிகாப்டர் மேலே கிளம்பி பறந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஒரு கழுகு வேகமாக பறந்து வந்து எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் பைலட் அமர்ந்திருக்கும் முன்பக்க கண்ணாடி மீது மோதியது. மோதிய வேகத்தில் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்து சிதறியது. மேலும் அந்த கழுகும் செத்து ஹெலிகாப்டருக்குள் விழுந்தது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து மரண ஓலமிட்டனர்.

இதற்கிடையே பதற்றம் அடைந்த பைலட், அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தரையிறங்கியதும் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் மைசூருவில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்கு பிறகு ‘ஹெலி ரைடு’ தொடர்ந்து நடந்தது.

மேலும் செய்திகள்