மஞ்சமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்

மஞ்சமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2017-10-01 22:45 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் காளைகள் முட்டியதில் திருமழபாடியை சேர்ந்த ஜவகர் (வயது 20), திருச்சியை சேர்ந்த தனபால் (28), கோவிலூரை சேர்ந்த விக்னேஷ் (19), காரைபாக்கத்தை சேர்ந்த அய்யாரப்பன் (45), சிறுகளத்தூரை சேர்ந்த ஜெயக்குமார் (28) உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த அய்யாரப்பன், ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் குடம், குத்து விளக்கு, மின்விசிறி, வேட்டி, சேலை போன்ற பரிசு பொருட் கள் வழங்கப்பட்டன.

அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திருமானூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர். ஜல்லிக் கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் மஞ்சமேடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்