குப்பை தொட்டியில் குழந்தை இறந்து கிடப்பதாக வந்த தகவலால் பரபரப்பு

புதுக்கோட்டையில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாக வந்த தகவலால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-01 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு மேல 3-ம் வீதியில் குப்பைத்தொட்டி ஒன்று உள்ளது. இந்த குப்பை தொட்டியில் வெகு நாட்களாக குப்பை அல்லாததால் அதிக அளவு குப்பை சேர்ந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தனியார் லாரியில் குப்பைகளை ஏற்றி அப்புறபடுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை இறந்து கிடப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கும், புதுக்கோட்டை டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்து புதுக்கோட்டை டவுன் போலீசார் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரா மற்றும் அதிகாரிகள் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களிடம் லாரியில் ஏற்றப்பட்ட குப்பைகளை கீழே கொட்ட சொல்லி, அந்த குப்பைகளை சோதனை செய்தனர். இதில் அந்த குப்பையில் குழந்தை இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை மீண்டும் அகற்றினார்கள். இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிய தொடங்கினார்கள். குப்பை தொட்டியில் குழந்தை இறந்து கிடப்பதாக வந்த தகவலால் நேற்று புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்