ஷீரடியில் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி திறந்து வைத்தார்

ஷீரடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

Update: 2017-10-01 23:45 GMT
ஷீரடி,

மராட்டிய மாநிலம் ஷீரடியில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்ய நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறார்கள்.

விழா மற்றும் விசேஷ நாட்களில் இந்த கூட்டம் இன்னும் அதிகரிக்கும். இதையடுத்து வந்துசெல்லும் பக்தர்களின் தேவையை மனதில் கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகமும், அரசும் செய்துவருகிறது.

இந்தநிலையில் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் ஷீரடியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ரூ.350 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது. இதில் ரூ.50 கோடியை கோவில் நிர்வாகம் வழங்கியது. மீதி பணத்தை அரசு செலவிட்டது. இதன் பணிகள் முடிவடைந்ததை அடுத்து விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைப்பார் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி விமான நிலைய திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஷீரடி விமான நிலையம் வந்து இறங்கினார். அங்கு நடந்த விழாவில் அவர் விமான நிலையத்தை திறந்து வைத்தார். மும்பைக்கு முதல் விமான சேவையையும் தொடங்கி வைத்தார். விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது மும்பையில் இருந்து ஷீரடிக்கு சாலை மார்க்கமாக செல்ல 5 மணி நேரம் ஆகிறது. ஆனால் விமானம் மூலம் 40 நிமிடத்தில் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்