நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 32½ அடியை எட்டியது

நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 32½ அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

Update: 2017-10-01 22:45 GMT

அந்தியூர்,

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 33.33 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள போலி, தட்டக்கரை பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் வரட்டுப்பள்ளம் அணைக்கு வரும்.

பர்கூர் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் தினமும் காலை மாலை இங்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்லும். அணை முழு கொள்ளளவை எட்டியதும் அதிலிருந்து உபரிநீர் கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியாபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகளுக்கும் திறந்து விடப்படும். இந்த ஏரிகள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதனால் அந்தியூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டத்தை எதிர்நோக்கியே இருப்பார்கள்.

இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து மளமளவென அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முன்பு வரை 32 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ½ அடி உயர்ந்தது.

இதனால் அணை நீர்மட்டம் 32½ அடி ஆனது. இன்னும் ½ அடி நீர் வந்தால் அணை அதன் முழு கொள்ளவை எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்