கோவை அருகே சுகாதார பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்

கோவை அருகே சுகாதார பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

Update: 2017-10-01 22:45 GMT

கோவை,

கோவை மாவட்டத்தில் கழிப்பறைகள் பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் சுகாதாரம் பேணிகாப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘தூய்மையே சேவை’ என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது. அதன்படி தொண்டாமுத்தூர் ஒன்றியம், வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:–

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த மாதம் 15–ந் தேதி தமிழக முதல்–அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. தூய்மை பாரத இயக்கம் சார்ந்த பணிகளை அனைத்து நிலைகளிலும் முடுக்கி விடுதல், சுகாதாரத்தை பேணி காப்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும். அதை வலியுறுத்தி பொது இடங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல், சுகாதாரத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்தல் மற்றும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதை வலியுறுத்தும் விதமாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளி லும் உள்ளாட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் இதர பொது இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்பினரால் சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்