சாலை வசதி இல்லாததால் இளம்பெண்ணின் பிணத்தை தொட்டில் கட்டி தூக்கி சென்ற ஆதிவாசி மக்கள்
சாலை வசதி இல்லாத காரணத்தால் இளம்பெண்ணின் பிணத்தை மூங்கில் கம்பில் துணியால் தொட்டில் கட்டி 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆதிவாசி மக்கள் தூக்கி சென்றனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது நிலம்பூர். இங்கு உள்ள காணிக்காவூர் பகுதியில் ஏராளமான ஆதிவாசி குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகள் மலைப்பாங்கான பகுதிகளில் அடர்ந்த மரங்கள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது. பல ஆதிவாசி குடியிருப்புகளுக்கு சரியான சாலை வசதி கூட கிடையாது. மேலும் இங்குள்ள மக்கள் மருத்துவம் உள்பட அத்தியாவசிய பணிகளுக்கு தங்கள் கிராமத்தை விட்டு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலையும் உள்ளது.
இங்குள்ள அச்சன்அளா என்ற ஆதிவாசி கிராமத்தில் சோலநாயக்கர் என்ற ஆதிவாசி மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். இங்குள்ள வெள்ளை என்பவரின் மகள் மாதி (வயது 26) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு அங்குள்ள வைத்தியர்கள் மூலம் முதலில் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவருக்கு குணம் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அவரை கோழிக்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது பிணத்தை ஆதிவாசி குடியிருப்புக்கு எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதி மிகவும் மேடாகவும், சாலை வசதி இல்லாததால் பாதி தூரம் மட்டுமே ஆம்புலன்ஸ் செல்ல முடிந்தது. அதன் பிறகு மூங்கில் கம்பில் துணியால் தொட்டில் கட்டி அதில் மாதியின் பிணத்தை வைத்து ஆதிவாசி மக்கள் 9 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களுக்கு மருத்துவம், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் அவதி அடைந்து வருகிறோம். எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.