விடிய விடிய கொட்டி தீர்த்த மழை திருவொற்றியூரில் 100 வீடுகளுக்குள் மழைநீர்

விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் திருவொற்றியூரில் 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

Update: 2017-10-01 22:45 GMT

திருவொற்றியூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. திருவொற்றியூர் பகுதியிலும் கனமழை பெய்தது.

திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான கலைஞர் நகர், சக்தி கணபதி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், எர்ணாவூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மழைநீர் கால்வாய்கள் அடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் தெருக்களில் குளம்போல் தேங்கியது.

அதேபோல் சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், முருகப்பாநகர் வழியாக பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் மழைநீர் கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடந்ததால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் சுமார் 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வாளி, கப் உள்ளிட்ட பாத்திரங்களால் இறைத்து வெளியேற்றினர். தற்போது தெருக்களில் முழங்கால் அளவுக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தெருக்களில் தேங்கிய மழை நீரால் முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

வீட்டு முன் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. மழைநீர் மேலும் புகுந்து விடாமல் தடுக்க வீட்டு முன் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து இருக்கிறார்கள்.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற ஆலோசனை நடத்தினர். நேற்று குறைந்த ஊழியர்களே இருந்ததால் அவர்களை கொண்டு மழைநீர் கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை சரி செய்து தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஒருநாள் இரவு பெய்த மழைக்கே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. தொடர்ந்து கனமழை பெய்யாததால் தப்பினோம். பாதாள சாக்கடை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பணியை விரைந்து முடித்து இருந்தால் தெருக்களில் மழைநீர் தேங்கி இருக்காது, கழிவுநீர் கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டு இருக்காது. பெரும் மழை வருவதற்குள் பாதாள சாக்கடை திட்ட பணியை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்று நோய் ஏற்படுவதை தடுக்க தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்