திருப்பூர் அருகே துணிகரம் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.8¾ லட்சம் கொள்ளை

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.8¾ லட்சத்தை மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.;

Update: 2017-10-01 22:00 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.8¾ லட்சத்தை மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:–

திருப்பூர்–அவினாசி ரோடு திருமுருகன்பூண்டியை அடுத்த அணைபுதூரில் இருந்து ராக்கியாபாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மங்கலம் கருமாபாளையத்தை சேர்ந்த தாமரை சரவணன் (வயது 37) என்பவர் உள்பட 4 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் தாமரைசரவணன் விற்பனையாளராக உள்ளார்.

அந்த டாஸ்மாக் கடையில் மது விற்பனையின் மூலம் வசூலாகும் பணத்தை ஊழியர் வங்கி கணக்கில் செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்ததால் பணத்தை வங்கியில் செலுத்தவில்லை.

கடந்த 3 நாட்களும் தாமரை சரவணன் இரவில் கடையை பூட்டி விட்டு மதுவிற்பனை மூலம் வசூலான பணத்தை எண்ணி வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் கடைக்கு வரும்போது அதை வீட்டில் இருந்து கடைக்கு எடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு கடந்த 3 நாட்களாக விற்பனையான பணத்தை எண்ணி உள்ளார். அப்போது அதில் ரூ.8 லட்சத்து 76 ஆயிரம் இருந்துள்ளது.

இதையடுத்து அந்த பணத்தை ஒரு துணி பையில் வைத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் மர்ம ஆசாமிகள் 2 பேர் வந்துள்ளனர். திடீரென அந்த மோட்டார்சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் தாமரை சரவணனை சரமாரியாக தாக்கி விட்டு அவர் மோட்டார்சைக்கிளில் மாட்டியிருந்த அந்த துணிப்பையை பிடித்து இழுத்துள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாமரைசரவணன் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டுள்ளார். ஆனால் இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் யாரும் வரவில்லை. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமிகள் 2 பேரும் துணிப்பையில் இருந்த ரூ.8 லட்சத்து 76 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்பி சென்றனர்.

பின்னர் இதுகுறித்து தாமரைசரவணன் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவருடைய புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து ரூ.8¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்