விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர் படகு சவாரி செய்து உற்சாகம்
விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர்.
பரங்கிப்பேட்டை,
சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த சுற்றுலா மையத்தில் மருத்துவ குணம் கொண்ட சுரப்புண்ணை காடுகள் உள்ளன. மேலும் 3 ஆயிரத்து 300–க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் உள்ளன. இது தவிர சுரபுண்ணை காட்டில் பல அறிய வகை பறவைகளும் உள்ளது. இதனை கண்டு ரசிக்க தினந்தோறும் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை மற்றும் பள்ளி தொடர் விடுமுறை யொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்து படகு சவாரி செய்து சுரபுண்ணை காடுகளை பார்த்து உற்சாகமடைந்தனர். அப்போது பலர் ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் செல்பீ எடுத்து கொண்டனர். பின்னர் அவர்கள் சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டிருந்த குடில்களில் அமர்ந்து குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.