தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2017-10-01 23:00 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் குடும்பம், குடும்பமாக வந்து செல்கிறார்கள். குறிப்பாக விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, சிறுவர் பூங்காவில் விளையாடி, அருவியின் மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுகிறது. தற்போது, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி நேற்று திற்பரப்பில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் அவற்றை நிறுத்தி வைக்க போதிய இடவசதி இல்லாமல் வாகன ஓட்டிகள் திணறினர்.

இதுபோல், அருவியில் நுழைவு வாயிலில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற்று உள்ளே சென்றனர். பின்னர், அருவியில் குளித்து மகிழ்ந்து, சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், அருவியின் மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்