ரெயில் சக்கரத்தில் சிக்கி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலி குடும்பத்தினர் கண் முன்னே பரிதாபம்

நெல்லை ரெயில் நிலையத்தில் ரெயில் சக்கரத்தில் சிக்கி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-10-01 23:15 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 54). மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சீதாம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் நெல்லை டவுன் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

கும்பகோணத்தில் உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை நாகராஜன் தன்னுடைய குடும்பத்தினருடன் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

2–வது நடைமேடையில் நின்றபோது நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மெதுவாக வந்தது.

ரெயிலில் இடம்பிடிக்கும் ஆர்வத்தில் நாகராஜன் மெதுவாக வந்த ரெயிலில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது இடது கால் ரெயில் சக்கரத்தில் சிக்கி கொண்டது. இதைக் கண்ட அவருடைய குடும்பத்தினர் அபய குரல் எழுப்பினர்.

ஆனால் சிறிது தூரத்தில் நாகராஜன் இழுத்துச் செல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நெல்லை ரெயில்வே போலீசார் நாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

குடும்பத்தினர் கண்முன்னே சப்–இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் நெல்லை ரெயில் நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்