விக்கிரமசிங்கபுரத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

விக்கிரமசிங்கபுரத்தில் ஆட்டோ டிரைவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-10-01 23:00 GMT

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் காந்திபுரம் தெருவை சேர்ந்தவர், மாரி மணவாளன் மகன் இசக்கியப்பன் (வயது 36). ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி நம்பியம்மாள். ரோசினி (8) என்ற மகள் உள்ளார். இசக்கியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்– மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பியம்மாள் கோபித்துக் கொண்டு, மூன்றடைப்பு அருகே உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் இசக்கியப்பன் தனது வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 29–ந் தேதி வீட்டில் இசக்கியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் இவரை யாரும் கவனிக்கவில்லை. கடந்த 2 நாட்களாக வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில், நேற்று காலை இசக்கியப்பனின் அண்ணன் மகன் வைகுண்டமணி, தனது சித்தப்பா கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு சாப்பிட வரவில்லையே என தேடி வந்துள்ளார்.

அங்கு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, இசக்கியப்பன் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும் இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இசக்கியப்பனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்