கோட்டக்குப்பம் அருகே சரக்கு ஆட்டோவில் ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல்

கோட்டக்குப்பம் அருகே சரக்கு ஆட்டோவில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது. போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

Update: 2017-10-01 22:00 GMT

விழுப்புரம்,

கோட்டக்குப்பம் அருகே உள்ள அடுத்த அனிச்சங்குப்பம் சோதனைச்சாவடியில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அங்கமுத்து, ஏட்டு சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை கண்டதும் சரக்கு ஆட்டோவை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து சரக்கு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அதில் 106 அட்டை பெட்டிகளில் 4,920 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய மினி லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்