18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதை ரத்து செய்துவிட்டு சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதை ரத்து செய்து விட்டு சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா? என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி கேசினோ சந்திப்பில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலையை திறந்து வைத்தார். மேலும் அங்கு நூலகத்தையும் அவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதன்பின்னர் ஊட்டி ஏ.டி.சி. திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளியில் செய்யப்பட்ட வீரவாள் மற்றும் வெற்றிக்கோப்பை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:–
நாம் சுயமரியாதை உணர்வோடு, தலை நிமிர்ந்து நிற்க ஒட்டுமொத்த தமிழர்களும் பாதுகாப்பாக இருக்க பாடுபடும் இயக்கம் தி.மு.க. தான். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மீது மக்கள் அளவு கடந்த கோபத்தில் இருக்கிறார்கள்.
ஆட்சியில் இருக்கிற கோபத்தை விட எங்கள் மீது தான் கோபத்தில் உள்ளனர். இன்னும் இந்த ஆட்சியை கலைக்காமல், கவிழ்க்காமல் உள்ளீர்களே என்பது தான் அந்த கோபம். தமிழக மக்கள் கொதிப்பாகவும், கொந்தளிப்பாகவும் உள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் உங்களிடம் இருந்து சென்று விட்டனர். உங்களை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். உங்களுக்கு தைரியம் இருந்தால், இந்த ஆட்சி மெஜாரிட்டி ஆட்சி என்று நீங்கள் சொல்வதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கிய உத்தரவை ரத்து செய்துவிட்டு, சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்கள். இது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முடியுமா?. இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஏற்கனவே குட்காவை சட்டமன்றத்தில் நாங்கள் காட்டினோம் என்பதற்காக என்னையும், சேர்த்து 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட்டீர்கள். நாங்கள் சென்னை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றோம்.
பொதுமக்களே நீங்கள் கோபத்தில் இருக்கிறீர்கள். நான் எங்கு சென்றாலும் இந்த ஆட்சியை எப்போது முடிக்க போகிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறீர்கள். தி.மு.க. கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை கைப்பற்றாது. ஆனால் பாரதீய ஜனதாவின் அடிமை ஆட்சியை தூக்கி எறிவதற்கு, அது தடை என்று நான் கருதவில்லை. நாம் தமிழ்நாட்டை முதலில் காப்பாற்ற வேண்டும். சட்டமன்றத்தை கவர்னர் கூட்டாத காரணத்தினால், ஐகோர்ட்டை நாம் அணுகி இருக்கிறோம். வருகிற 4–ந் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. 4–ந் தேதியை எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இன்னும் 2 நாட்கள் பொறுங்கள். தமிழ்நாட்டு மக்களே மகிழ்ச்சி அடையக்கூடிய நல்ல தீர்ப்பு வர காத்திருக்கிறது. அந்த தீர்ப்பின் மூலமாக தமிழகம் மகிழ்ச்சி அடையும். அதற்கு காத்திருங்கள். தயாராக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.