தேவதானப்பட்டியில், இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்: தடுக்கச்சென்ற போலீஸ் ஏட்டு உள்பட 2 பேரின் மண்டை உடைப்பு
தேவதானப்பட்டியில், இருதரப்பினருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தை தடுக்கச்சென்ற போலீஸ் ஏட்டு உள்பட 2 பேரின் மண்டை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தேவதானப்பட்டி,
தேவதானப்பட்டியில் ஆண்டுதோறும் விஜயதசமியன்று மகரநோன்பு திருவிழா கொண்டாடப்படும். அதன்படி நேற்று முன்தினம் மகரநோன்பு திருவிழா நடத்தப்பட்டது. முன்னதாக தேவதானப்பட்டி முருகமலையில் உள்ள பரமசிவன் கோவில், சாத்தாகோவில்பட்டியில் உள்ள திம்மராயபெருமாள் கோவில் ஆகியவற்றில் இருந்து சாமி சிலைகள் பல்லக்கில் ஏற்றப்பட்டு தேவதானப்பட்டி பகுதியில் ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
தெற்கு தெரு அருகே ஊர்வலம் சென்ற போது, அப்பகுதியை சேர்ந்த சிலர் சாமி சிலைகளை தங்கள் தெருவை நோக்கி திருப்பி காட்டும்படி கூறியுள்ளனர். இதற்கு, சிலைகளை பல்லக்கில் தூக்கி வந்தவர்கள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த கோவில் நிர்வாகிகளும், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டு பாலமுருகன், ஊர்க்காவல் படையை சேர்ந்த முத்துமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போது தெற்கு தெருவை சேர்ந்த சிலர் போலீசார் மீது கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். கல்வீச்சில் ஏட்டு பாலமுருகன் மற்றும் முத்துமணி ஆகியோரின் மண்டை உடைந்தது. இதில் படுகாயமடைந்த அவர்களை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மீது கல், பாட்டில்களை வீசியதாக தெற்கு தெருவை சேர்ந்த முத்துராஜ், மற்றொரு முத்துமணி, தங்கப்பாண்டி, அசோக் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.