கோவில் பகுதிகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்
ராமேசுவரத்தில் கோவில் பகுதிகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் வளாகத்தில் தூய்மையே சேவை தூய்மைப்பணிகள் நடைபெற்றன. இதனை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்து வடக்கு நந்தவன பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேசுவரம் ராமநாதசாமி திருக்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலங்கள், அயல்நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை தூய்மையாக பராமரிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். கோவில் வளாகத்தில் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் செய்யப்படும் சடங்குகளின் போது பக்தர்கள் பழைய ஆடைகளை கடற்கரையில் விட்டுச்செல்லும் பழக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுப்புறம் மாசுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பொதுமக்கள் பழைய ஆடைகள், மலர்கள் உள்ளிட்ட பொருட்களை கடற்கரையில் விட்டுச்செல்லாமல் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள இடத்தினை பயன்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அதிகஅளவில் அறிவிப்பு பதாகைகள், மற்றும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
பொதுமக்கள் கோவில் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மூலம் அபராதம் வசூலிக்கப்படும். ராமேசுவரத்துக்கு தற்போது அதிகஅளவில் வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுஉள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ராமேசுவரம் கோவில் கிழக்கு கோபுர வாசலில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தூய்மையே சேவை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்சசியில் கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், சுகாதார அதிகாரி அய்யப்பன், கோவில் சூப்பிரண்டு ககாரின், பாலசுப்பிரமணி, விவேகானந்த கேந்திர பொறுப்பாளர் சரசுவதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கமலா, துணை தாசில்தார் அப்துல் ஜப்பார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.