விதைகளின் தாய்

பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் களப்பணியில் முழு மூச்சாக இறங்கி இருக்கிறார், ரஹிபாய் சோமா போபரே.

Update: 2017-10-01 13:30 GMT
பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் களப்பணியில் முழு மூச்சாக இறங்கி இருக்கிறார், ரஹிபாய் சோமா போபரே. 54 வயதான இவர் மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்திலுள்ள கொம்பால்னே கிராமத்தை சேர்ந்தவர். ரஹிபாய், 80 வகையான பாரம்பரிய பயிர் இனங்களின் விதைகளை சேகரித்து பாதுகாத்து வருகிறார். மரபணு மாற்ற விதைகளை விவசாயிகள் விளைவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். விவசாயிகளிடம் பாரம்பரிய விதைகளை மட்டுமே நடவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

“பாரம்பரிய விதைகள் மூலம் விளைவிக்கப்படும் தாவரங்கள் வறட்சியை தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டவை. நோய் தாக்குதல்களுக்கும் ஆளாகாமல் இருக்கும். அவற்றில் ஊட்டச்சத்துக் களும் நிறைந்திருக்கும். அத்துடன் அவை மண் வளத்தையும் பாதுகாக்கும். ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டிய அவசிய மிருக்காது. பயிர்களுக்கு அதிகப்படியான நீரும் தேவைப்படாது” என்கிறார்.

மரபணு மாற்ற விதைகள் மண் வளத்துக்கும், உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பது ரஹிபாயின் கருத்தாக இருக்கிறது. விவசாய குடும்பத்தை பின்னணியாக கொண்ட இவர் தனது அனுபவத்தின் மூலமாகவே பாரம்பரிய விதைகளின் தனித்துவத்தை உணர்ந்திருக்கிறார். தற்போது மரபணு மாற்று விதைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதன் தாக்கமாக, பாரம்பரிய விதைகள் அழிந்து வருவதை கண்கூடாக கண்டு வேதனைப்பட்டிருக்கிறார். அவைகளை பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். அத்துடன் மண் வளத்தை மேம்படுத்துவதற்கும், பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்குகிறார். பாரம்பரிய விதைகள் மூலம் நாற்றுகளை வளர செய்து அவைகளை பயிரிட்டு வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். இதற்காக அமைப்பு ஒன்றையும் நிர்வகித்து விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்.

“விவசாயிகள் விளைந்த பயிர்களை விற்பனை செய்யும்போது, அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை சேமிக்காமல் விட்டு விடுகிறார்கள். அதனால் மரபணுமாற்ற விதைகளை நாடவேண்டிய சூழல் இருக்கிறது. உள்ளூர் விதைகளை பாதுகாப்பது முக்கியம். இல்லாவிட்டால் பாரம்பரிய விதை இனமே அழிந்துவிடும்” என்றும் ஆதங்கப்படுகிறார்.

ரஹிபாய் முதலில், பெண் விவசாயிகளின் உதவியுடன் உள்ளூர் விதைகளை சேகரிக்கத் தொடங்கி இருக்கிறார். மேலும் அந்த விதைகளை பாதுகாக்க சுய உதவி குழுவையும் உருவாக்கி இருக்கிறார். அந்த குழு மூலம் விவசாயிகளிடம் தன்னுடைய நோக்கத்தை விதைத்திருக்கிறார். ஆரம்பத்தில் அதற்கு வரவேற்பு கிடைக்காத போதிலும் அவருடைய முழு ஈடுபாடு, விவசாயிகளின் கவனத்தை ஈர்த்திருக் கிறது.

“கலப்பின பயிர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடும் கிராமவாசிகள் அடிக்கடி உடல்நலக்குறைவுக்கு ஆளாகிறார்கள். பாரம்பரிய விதைகள் மூலம் விளையும் உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது” என்கிறார்.

ரஹிபாய், 15 வகையான நெல், 60 வகையான காய்கறி விதைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உட்பட பல உள்ளூர் விதைகளை பாதுகாத்துள்ளார். மழை நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் நீர் கட்டமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறார். இவருடைய முயற்சியை பாராட்டும் வகையில் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் ‘விதைகளின் தாய்’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்து உள்ளது. 

மேலும் செய்திகள்