மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டம் தேவையில்லை உத்தவ்தாக்கரே பேச்சு

மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டம் தேவையில்லை என மும்பை நடந்த தசரா விழா பொது கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார்.

Update: 2017-09-30 23:40 GMT

மும்பை,

நேற்று முன்தினம் நடந்த எல்பிஸ்டன் ரோடு விபத்தில் 23 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து ரெயில்வே மந்திரி மேம்பாலத்தை புதிதாக கட்ட அறிவிப்பு வெளியிட்டார். பலியான பின் இப்பொழுது தான் கண் தெரிந்ததா? பட்ஜெட்டில் ஏற்கனவே பாலத்தை விரிவு படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறாமல் இருக்க என்ன காரணம் என தெரியவில்லை. நான் இதை அரசியல் ஆக்க விரும்பவில்லை.

புல்லட் ரெயில் மும்பையில் இருந்து ஆமதாபாத்திற்கு ஏன் இயக்கப்பட வேண்டும். மும்பை மராத்தி மக்களுக்கு ஆமதாபாத்தில் என்ன வேலை?. நீங்கள் சொல்லுங்கள் எத்தனை பேர் தினசரி அங்கு செல்ல உள்ளீர்கள்?. காஷ்மீர்– கன்னியாக்குமரி, டெல்லி– ஸ்ரீநகர் இடையே புல்லட் ரெயில் சேவையை தொடங்க வேண்டியது தானே?. மும்பை மக்களுக்கு புல்லட் ரெயில் திட்டம் தேவையில்லை.

ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசி பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை இது வரையில் 16 முறை உயர்ந்து உள்ளது. தற்போது பெட்ரோல் விலை ரூ.80 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே பெட்ரோல் பாகிஸ்தான் நாட்டில் ரூ.45–க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. அந்த விலையை ஏன் நமது நாட்டிற்கு கொண்டு வர முயற்சி எடுக்கவில்லை. இதனால் நாடு முன்னேறுகிறதா? அல்லது பின்நோக்கி செல்கிறதா என்பது விளங்கவில்லை.

மியான்மர் நாட்டின் ரோஹிங்கா முஸ்லீம் மக்கள் வங்காளதேசத்திற்கு தஞ்சம் புகுந்து வருகிறார்கள். ஆனால் அந்த நாட்டு பிரதமர் ஹசீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒரு முஸ்லீம் நாடே முஸ்லீம் இன மக்களுக்கு அகதியாக நுழைய ஒத்துழைப்பு தர மறுக்கிற போது நமது நாட்டில் நுழைய எப்படி ஒப்புக்கொள்ள முடியும். மேலும் மியான்மர் நாட்டில் வசித்து வந்த 23 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் மிகவும் கண்டிக்கிறேன். நமது நாட்டில் ரோஹிங்கா முஸ்லீம் இன மக்களை நுழைந்தால் உடனே அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புங்கள்.

நமது நாட்டில் வந்தே மாதரம் சொல்ல முடியாது எனில் வேறு நாட்டிற்கு நாடு கடத்துங்கள் என மற்றவர்கள் சொல்வது நான் கேட்டு இருக்கிறேன். அவர்கள் சொல்ல மறுப்பு தெரிவித்தால் தூக்கிலா போட முடியும். ஒவ்வொரு இந்திய குடிமகன் வந்தே மாதரம் சொல்லாமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய வி‌ஷயம்.

பிரதமர் மோடி பணமதிப்பு நடவடிக்கை எடுத்த பின்னர் நாட்டில் என்ன முன்னேற்றம் கண்டு உள்ளது?. உங்களுக்கு யாருக்காவது தெரியுமா?. ஊழல், கருப்பு பணம் அப்படியே தான் உள்ளது. ஏழை மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து உள்ளார். நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என சிவசேனாவிற்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம். எங்களுக்கு மூத்த தலைவர்கள் அறிவுரையின் படி நாங்கள் செயல்படுவோம். நாங்கள் எங்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என கேட்கவில்லை.

கடந்த 25 வருடமாக பா.ஜனதா அரசுடன் சிவசேனா கூட்டணி வைத்து உள்ளது. இதனால் சிவசேனாவின் இந்துத்துவா கொள்கையை யாரும் உடைக்க நினைத்தால் சிவசேனா சரியான பாடம் கற்பிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இதனை கைகட்டி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது.

சவுபாக்கியா யோஜனா திட்டம் தற்போது நாட்டு மக்களுக்கு மோடி அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தால் எத்தனை பேர் பயன்பெறுவார்கள் என்பது அவருக்கு தெரியுமா?. ஒரு கையால் மின்சாரத்தை கொடுத்து விட்டு மற்றொரு கையால் கையூட்டு வாங்குவது உங்களுக்கு தெரியுமா? தற்போது நாட்டில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நமது கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதன்பிறகு விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறினால் நமது ஆர்ப்பாட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த வேண்டி வரும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மராத்தி மக்கள் பொதுசொத்திற்கு சேதம் விளைவிக்காமல், யாரையும் புண்படுத்தால் தங்களது மக்களுக்காக போராட முன்வர வேண்டும்.

இவ்வாறு உத்தவ்தாக்கரே பேசினார்.

மேலும் செய்திகள்