தொடர் விடுமுறை எதிரொலி நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தொடர் விடுமுறை எதிரொலியாக நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போதுமான படகுகள் இயக்காததால் சுற்றுலா பயணிகள் சாரி செய்யமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2017-09-30 22:18 GMT

அரியாங்குப்பம்,

சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி, இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் நாளை (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை கொண்டாடுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த 28–ந் தேதி இரவு முதல் குவியத்தொடங்கினர். இதனால் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. புதுவை கடற்கரையில் சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மக்கள் கண்டுகளித்தனர்.

தொடர் விடுமுறை எதிரொலியாக பாரதி பூங்கா, தவரவியல் பூங்கா, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் மற்றும் ஊசுட்டேரி படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கடந்த 2 நாட்களும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து படகு சவாரி மற்றும் பாரடைஸ் பீச்சில் குளித்துச்சென்றனர்.

நேற்று அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால், போதுமான படகுகள் இயக்க முடியவில்லை. இதனால் மதியம் 2 மணிவரை மட்டுமே படகு சவாரிக்கான டிக்கெட் கொடுக்கப்பட்டது. 2 மணிக்கு டிக்கெட் பெற்ற சுற்றுலா பயணிகள் 4.30 மணி வரை காத்திருந்து படகு சவாரி செய்தனர். பல மணிநேரம் காத்திருந்ததால் சுற்றுலா பயணிகள், ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். குறைந்த அளவிலே படகுகள் இயக்கியதாலும், வேகமாக செல்லும் மோட்டார் படகுகள் இயக்கப்படாததாலும் மதியத்துக்கு மேல் வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை புரிந்துள்ளதால், பிற மாநில பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் புதுவை நகரில் அதிகளவில் வலம் வந்ததை காணமுடிந்து. இதனால் நகரின் முக்கிய சந்திப்புகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சட்டம்– ஒழுங்கு போலீசாருடன் இணைந்து, போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சரிசெய்தனர்.

மேலும் செய்திகள்