குளத்தில் மூழ்கி டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 3 பேர் சாவு

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவத்தில், குளத்தில் மூழ்கி டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-09-30 23:00 GMT
குழித்துறை,

தென்தாமரைகுளம் அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் செல்லதம்பி, கட்டிட தொழிலாளி. இவரது மகன் செல்வசந்திர பாபு (வயது24). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இவர்களுக்கு விஜயநகரியில் சொந்தமாக வயல் உள்ளது.

நேற்று முன்தினம் காலை செல்வசந்திர பாபு தனது நண்பன் தென்தாமரைகுளத்தை சேர்ந்த ராபின் (23) என்பவரை அழைத்து கொண்டு வயலில் வேலை செய்ய சென்றார். வேலை முடிந்த பின்பு, இருவரும் அருகில் உள்ள சடையநேரி குளத்தில் குளிக்க சென்றனர். அவர்கள் குளித்து கொண்டிருந்த போது, ராபின் குளத்தின் மறு கரைக்கு நீந்தி சென்றார். அவரை பின்தொடர்ந்து செல்வசந்திர பாபுவும் நீச்சலடித்து சென்றனர்.

செல்வசந்திர பாவுக்கு சரியாக நீச்சல் தெரியாது எனக்கூறப்படுகிறது. குளத்தின் நடுவே ஆழமான பகுதியில் சென்றவுடன் அவர் தண்ணீரில் தத்தளித்த படி, ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என சத்தம்போட்டார். இதைப்பார்த்த நண்பர் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், அதற்குள் செல்வசந்திர பாபு தண்ணீரில் பரிதாபமாக மூழ்கினார்.

தனது கண்முன்பே நண்பன் தண்ணீரில் மூழ்குவதை பார்த்து ராபின் கதறி அழுதார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் குளத்தில் இறங்கி செல்வ சந்திர பாபுவை தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தென்தாமரை போலீசாருக்கும், கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று குளத்தில் இறங்கி செல்வசந்திரபாபுவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அமலதாஸ் வழக்குப்பதிவு செய்தார். கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். குளத்தில் மூழ்கி டிப்ளமோ என்ஜினீயர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் மார்த்தாண்டம் பகுதியில் 2 பேர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:–

மார்த்தாண்டம் அருகே காஞ்சிரங்கோடு காக்கவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32), இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே குளிக்க சென்ற ராஜேஷ் காணவில்லை என அவரது உறவினர்கள் குளத்திற்கு வந்தனர். அங்கு தண்ணீரில் இறங்கி தேடிய போது ராஜேஷ் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மார்த்தாண்டம் அருகே கீழ்பம்மம் வலியகாட்டுவிளையை சேர்ந்தவர் வினு (34), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்தநிலையில், நேற்று முன்தினம் வினு அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அவர் குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்