டெங்கு காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை பலி

பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2017-09-30 23:00 GMT
பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே குறும்பலாபேரி சமுத்திரபுரம் தெருவை சேர்ந்தவர் கடல் முருகன். அவருடைய மனைவி ஜீவகனி. இவர்களுடைய ஒரு வயது மகள் மகாநீஷா. இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே குழந்தை அதற்குரிய வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் குழந்தை மகாநீஷா பரிதாபமாக இறந்தாள். அவளது உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது.

ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் முத்துவேல் ராஜன் (16), வடக்கு காவலாகுறிச்சியை சேர்ந்த கற்பகவள்ளி (19), ஆலங்குளம் நந்தவன கிணறு தெருவை சேர்ந்த மகேந்திரன் (10), அதே தெருவை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி பெண் மரிய ரோஸ்லின் (25) ஆகிய 4 பேர் ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். தற்போது டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம், அம்பை, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இளம் வயதுள்ளவர்களை இந்த காய்ச்சல் காவு வாங்கி வருகிறது. எனவே மாவட்ட சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் தடுப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும்.

குறிப்பாக டெங்கு காய்ச்சல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையநல்லூர் பகுதிகளில் சிறப்பு சுகாதார முகாம்கள் நடத்த வேண்டும். அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்