கோவாவில் வசிக்கும் கன்னடர்களின் வீடுகள் இடிக்கும் பணி தொடக்கம் முதல்–மந்திரி மனோகர் பாரிக்கருக்கு, ஜெகதீஷ் ஷெட்டர் கடிதம்
கோவாவில் வசிக்கும் கன்னடர்களின் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது குறித்து,
பெங்களூரு,
அந்த மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவரான ஜெகதீஷ் ஷெட்டர் கடிதம் எழுதியுள்ளார். அதில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் வலியுறுத்தி உள்ளார்.
கோவா மாநிலம் பைனா கடற்கரை அருகே கர்நாடகத்தை சேர்ந்த 55 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், அங்கு புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்காக 55 குடும்பத்தினர் வசிக்கும் வீட்டை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த குடும்பத்தினர் வீடுகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கருக்கு, கர்நாடக எதிர்க்கட்சி தலைவரான ஜெகதீஷ் ஷெட்டர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:–
கோவாவில் 15 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் 3 லட்சம் பேர் கன்னடர்கள் ஆவார்கள். கதக், பாகல்கோட்டை, விஜயாப்புரா போன்ற மாவட்ட மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். அதுபோல பைனா கடற்கரையில் கர்நாடகத்தை சேர்ந்த 55 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் இடம் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சொந்தமானது. அந்த இடம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதால், அங்கு கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக கன்னடர்கள் வசிக்கும் 55 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
வீடுகளை இடிக்கும் முன்பாக 55 குடும்பத்தினருக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதனை செய்ய தவறி விட்டனர். பைனா கடற்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னடர்கள் வசித்தாலும், அவர்களிடம் நிலத்துக்கு சொந்தமான எந்த ஒரு ஆவணங்களும் இல்லை. எனவே அவர்கள் வசிக்கும் வீடுகளை இடிக்கும் பணியை நிறுத்த வேண்டும். இல்லையெனில், வீடுகள் இடிக்கப்பட்டாலும் அந்த 55 குடும்பத்தினருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் கோவா அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.