பெரியபாளையம் அருகே காணாமல்போன பெண் என்ஜினீயரை கண்டுபிடிக்கக்கோரி சாலை மறியல்

பெரியபாளையம் அருகே காணாமல்போன பெண் என்ஜினீயரை கண்டுபிடிக்கக்கோரி அவரது உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-30 23:15 GMT

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரையை சேர்ந்தவர் அனந்தராமன், விவசாயி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஹேமஸ்ரீ(வயது 24) கடந்த ஆண்டு கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து முடித்தார்.

ஹேமஸ்ரீ நேற்று முன்தினம் மாலை செங்குன்றத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அனந்தராமன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

ஹேமஸ்ரீ வடமதுரையை சேர்ந்த பச்சையப்பன் என்கிற சந்தோஷ்(27) என்ற வாலிபருடன் இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. எனவே, போலீசார் அவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் காணாமல்போன இளம்பெண்ணை உடனடியாக தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் விரைந்துவந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே அவர்கள் 2 பேரும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டது. இதனை அறிந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்