சம்பளம் கேட்டு பழனி அரசு மருத்துவமனை ஊழியர் பிச்சை எடுத்து போராட்டம்

பழனி அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக வேலை பார்ப்பவர் ராமசாமி.

Update: 2017-09-30 23:15 GMT

பழனி,

பழனி அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக வேலை பார்ப்பவர் ராமசாமி (வயது 40). நேற்று முன்தினம் காலை இவர் அரசு மருத்துவமனை வளாகத்துக்கு வந்து அமர்ந்தார். பின்னர் தனக்கு முன்னால் ஒரு துண்டை விரித்து வைத்து பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினார். அப்போது தனக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்.

 இது குறித்து அவர் கூறுகையில், நான் ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக எனது சம்பளத்தை வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. எனவே சம்பளம் வழங்கப்படும் வரை போராட்டம் நடத்துவேன் என்றார்.

இது குறித்து பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயசேகரிடம் கேட்ட போது, ராமசாமிக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படவில்லை. வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவருக்கான சம்பளம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. வங்கிகள் திறக்கப்பட்டதும் அவருக்கான சம்பளத்தொகை அவருடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்