அரசு பணியாளர் தேர்வாணையம் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தால் விடைத்தாள் நகலை அவர்களுக்கு வழங்க வேண்டும் என மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-09-30 23:00 GMT

விருதுநகர்,

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றுபவர் மாரிமுத்து. இவர் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

நான் எனது பதவி உயர்வுக்காக கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டு தேர்வுகளை எழுதினேன். இந்த தேர்வுகளில் நான் தேர்ச்சி பெறவில்லை. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2005–ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனது விடைத்தாள்களின் நகல்களை அனுப்பி வைக்க உரிய முறையில் விண்ணப்பித்தேன். அதற்கு தேர்வாணையம் விடைத்தாள்களின் நகல்களை அனுப்ப முடியாது என்றும், அலுவலக நேரத்தில் நேரில் வந்து விடைத்தாள்களை பார்வையிட்டு செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது. எனது விடைத்தாள் நகல்களை வழங்க தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மாநில தலைமை தகவல் ஆணையரும், பணி ஓய்வுபெற்ற காவல்துறை தலைவருமான ராமானுஜம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் மாரிமுத்து விடைத்தாள்களின் நகல்களை பெறுவதற்கு செலுத்தி உள்ள கூடுதல் கட்டணத்தையும் அதற்கான விண்ணப்பத்தையும் திருப்பி அனுப்பி உள்ளதாகவும் ரூ.10 மட்டும் கட்டணமாக செலுத்தி விடைத்தாள்களின் நகல்களை பெற்றுக்கொள்ளுமாறும் தேர்வாணைய பொதுதகவல் அலுவலர் பார்வதி தெரிவித்துள்ளதாக தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மனு தாரர் மீண்டும் விடைத்தாள்கள் நகல்கோரி கடந்த 10.4.2017 அன்று உரிய முறையில் விண்ணப்பித்ததற்கு தற்போது தேர்வாணையம் பொது தகவல் அலுவலராக பணியாற்றும் சந்திரசேகரன் தேர்வுகளின் விடைத்தாள்களின் நகல்களை வழங்குவது வழக்கதில் இல்லைஎன்றும், விடைத்தாள்களை பார்வையிட மனு தாரர் உரிய ஆவணங்களுடன் வேலை நாட்களில் தேர்வாணையம் அலுவலகத்தில் பார்வையிட்டுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மனுதாரர் அரசு கட்டணமாக பணம் செலுத்திய சீட்டை திருப்பிஅனுப்பி வைத்தால் அவர் எப்படி அதை பணமாக பெற முடியும்? மேலும் விடைத்தாள்களின் நகல்கள் கேட்டு தேர்வுஎழுதியவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே இந்த ஆணையம் உச்சநீதிமன்ற உத்தரவுகளின் நகல்களை இணைத்து தேர்வாணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் தகவல் ஆணையம் வேறு ஒரு வழக்கில் விடைத்தாள்களை வந்து பார்த்துக்கொள்ளும்படி கூறுவது தவறு என்று குறிப்பிட்ட விடைத்தாள்களின் நகல்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னரும் பொது தகவல் அலுவலர் இவ்வாறு பதில் அளித்தது வேண்டும் என்றே தகவல் மறுக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் ஆணையம் கருதுகிறது. விருதுநகரில் இருந்து விண்ணப்பதாரர் இங்கு வந்து பார்வையிடுவதில் ஏற்படும் தேவையற்ற செலவை கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு செய்வது தகவல் பெறும் உரிமை சட்டத்தை பொருட்படுத்தாத செயல் ஆகும்.

ஆணையத்தின் வழிக்காட்டலுக்கு பின்னரும் தேர்வாணையத்தின் பொது தகவல் அலுவலர்கள் சந்திரசேகரன், பார்வதி ஆகியோர் மீது தகவல் அறியும் சட்டப்பிரிவு 20 (1), 20 (2)–ன் கீழ்நடவடிக்கை எடுக்க தேர்வாணையம் முடிவு செய்கிறது. இருவரும் 4.10.2017 அன்று மதியம் 2½ மணிக்கு நேரில் ஆஜராகி அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்க உத்தரவிடப்படுகிறது. அவ்வாறு அவர்களிடம் இருந்து விளக்கம் ஏதும் பெறப்படாது எனில் அவர்கள் தரப்பில் அளிக்ககூடிய விளக்கம் ஏதும் இல்லை என்று கருதி அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல்அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை மறுப்பதானால் இச்சட்டத்தில் கூறி உள்ள விதிவிலக்குகள் ஏதேனும் குறிப்பிட வேண்டும். கேட்கப்பட்ட தகவல்கள் வழங்கும் வழக்கம் இல்லை என்று கூறுவது முற்றிலும் முறைகேடானாது. எனவே மனுதாரருக்கு அவர் கோரிய விடைத்தாள்களின் நகல்களை சான்றொப்பமிட்டு கட்டணம் இன்றி பதிவு தபாலில் அனுப்பி வைக்க உத்தரவிடப்படுவதுடன் இது குறித்து 4.10.2017 அன்று இவ்வாணையத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவின் நகல் முன்னாள் பொதுதகவல் அலுவலர் பார்வதிக்கு, தற்போதைய பொது தகவல்அலுவலர் சார்பு செய்து அவரது ஒப்பளிப்பு பெற்று அதன் நகல் இவ்வாணையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்