சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த 1½ கிலோ தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திவரப்பட்ட 1½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குட்கா போதை பொருட்களையும் கைப்பற்றினார்கள்.;

Update: 2017-09-30 22:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்துவரும் விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்திக்கொண்டுவருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சிவகங்கையை சேர்ந்த அலி சபிஷேக் (வயது 30) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு வந்தார். இவரது உடலை சோதனை செய்தபோது உள்ளாடையில் தங்கம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.13 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவரது கைப்பையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட சுமார் 2 ஆயிரம் குட்கா போதை பொருள் பாக்கெட்கள் இருந்தன. அவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மலேசியாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. இதில் வந்த சென்னையை சேர்ந்த செரீனா தமீனா (47) என்பவரை சோதனை செய்து, அவரிடம் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்க நகைகளை கைப்பற்றினார்கள்.

பக்ரைன் விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த ஷேக் அல்லாபாஷா (38) என்பவரிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மதொலைபேசி அழைப்பு

* முகப்பேர் நொளம்பூரில் கொடூரமாக கொலை செய்து உடலை வீசிய சம்பவம் தொடர்பாக, ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று தொலைபேசி மூலம் பேசிய மர்மநபர், ‘நான் தான் கொலையாளி. புளியந்தோப்பில் உள்ளேன். முடிந்தால் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

* கொளத்தூர் அருகே மக்காவரம் தோட்டம் பகுதியில் கூலித்தொழிலாளி சங்கர் (40) என்பவரை அரிவாளால் வெட்டிய தனசேகர் (38), குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* ஆழ்வார்பேட்டையில் நேற்று 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சுப்பிரமணி (45) கைது செய்யப்பட்டார்.

* தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 12 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார்.

மின்சாரம் தாக்கி பலி

* கிண்டியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் நீலாங்கரையைச் சேர்ந்த கார்த்திக் (37) உயிரிழந்தார். இதுதொடர்பாக லாரி டிரைவர் பஞ்சாப்பைச் சேர்ந்த அஸ்லாம் (27) கைது செய்யப்பட்டார்.

* கிண்டி நரசிங்கபுரம் பகுதியில் உள்ள விடுதியில் மர்மநபர்கள் 15 செல்போன்கள், 3 மடிக்கணினிகள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.

* ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகர் 5-வது தெருவில் பட்டாசு வெடித்தபோது, முருகன் என்பவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.

* மணப்பாக்கம் அம்பேத் கர் நகரில் அறுந்து விழுந்த மின்கம்பியை ஓரமாக எடுத்துப்போட முயன்றபோது, மின்சாரம் தாக்கி வடிவேல் (28) என்பவர் உயிரிழந்தார்.

* செம்மஞ்சேரியில் குட்டை யில் மூழ்கி பிரவீன்குமார் (6) என்ற சிறுவன் உயிரிழந்தான்.

மேலும் செய்திகள்