ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
போத்தனூர்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தேவேந்திர குல வேளாளர் இனத்தவரை பட்டியல் பிரிவில் இருந்து நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 6–ந் தேதி சென்னையில் மாநாடு நடைபெறுகிறது. புதிய தமிழகம் கட்சியின் முயற்சியால் நடத்தப்படும் இந்த மாநாட்டில் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாணவி அனிதா மரணத்திற்கு வெளிப்புற அழுத்தம் காரணம் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. அனிதா மரணம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் உள்ள டி.ஜி.பி. மூலமாகவே விசாரணை நடத்த வேண்டும். டெல்லி வரை மாணவி அனிதாவை அழைத்து சென்றவர்களை தாழ்த்தப்பட்டோர் ஆணையமே நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும்.
சென்னை பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் நீட் தேர்விற்கு எதிராக அரசியல் கட்சியினர் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்று பேசியுள்ளனர். அப்படி அவர்கள் நீதிமன்றம் சென்றால் நானும் நீதிமன்றம் செல்வேன். நீட் தேர்விற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் கோர்ட்டுக்கு செல்ல தயாராக உள்ளனர்.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்க வேண்டும். இதற்கு மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில் பணியில் இருக்கும் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும்.
தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். அதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. புதிய கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் நலனுக்காக நடுநிலையோடு செயல்பட வேண்டும். அரசு எந்திரத்தை முடுக்கி விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.