திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் மயானத்திற்கு பாதை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்துதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-30 22:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் ஆண்டிபாளையம் சின்னியகவுண்டர்புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 30). இவருடைய மனைவி நதியா. இவர்களுக்கு விஷாந்தினி(8) என்ற குழந்தை இருந்து வந்தது. விஷாந்தினி அருகில் உள்ள அரசு பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு விஷாந்தினிக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர் அவளை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விஷாந்தினி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து, சின்னியகவுண்டன்புதூர் முத்துநகர் பகுதியில் உள்ள மயானத்தில் விஷாந்தினியின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அந்த மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், மயானத்திற்கு செல்ல பாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முத்தூர்–சின்னாண்டிபாளையம் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த ஊரக போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், பரவிவரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்