விராரில் தந்தை, மகன் கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டு, மெக்கானிக் கைது

விராரில் தந்தை, மகன் கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டு, மெக்கானிக் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன. தந்தை, மகன் கொலை பால்கர் மாவட்டம் விரார் சாகர்நகரை சேர்ந்தவர் சந்திரகாந்த்(வயது45). இவரது மகன் ஹர்ஷ்(10). அங்குள்ள பள்ளி

Update: 2017-09-28 23:43 GMT

மும்பை,

விராரில் தந்தை, மகன் கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டு, மெக்கானிக் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

பால்கர் மாவட்டம் விரார் சாகர்நகரை சேர்ந்தவர் சந்திரகாந்த்(வயது45). இவரது மகன் ஹர்ஷ்(10). அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். கடந்த திங்கட்கிழமை அன்று மகனை பள்ளியில் இருந்து அழைத்து வர சந்திரகாந்த் சென்றிருந்தார். ஆனால் இருவரும் வீடு திரும்பவில்லை.

இதுபற்றி சந்திரகாந்தின் மனைவி விரார் போலீசில் புகார் கொடுத்தார். மறுநாள் சிறுவன் ஹர்ஷ் விராரில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக மீட்கப்பட்டான். அவன் முகம் ‘செல்லோடேப்’பால் சுற்றப்பட்டு இருந்தது.

அவன் மூச்சுதிணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

சந்திரகாந்த் தான் மகனை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதிய நிலையில், நேற்றுமுன்தினம் அவரும் அங்குள்ள சாக்கடையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவரும் ‘செல்லோடேப்’பால் சுற்றப்பட்டு மூச்சு திணறடித்து கொல்லப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தந்தை, மகனை கொடூரமாக கொன்று வீசிய கொலையாளிகள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில், விராரை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டான விஷ்ணு பாட்டீல்(வயது35) என்பவருக்கும், சந்திரகாந்துக்கும் பணப்பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் விஷ்ணு பாட்டீலை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் தான் தந்தை, மகன் இருவரையும் கொலை செய்து வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–

விராரில் வீடு ஒன்றை வாங்கி தரும்படி சந்திரகாந்த் ரூ.12 லட்சத்தை விஷ்ணு பாட்டீலிடம் கொடுத்து உள்ளார். ஆனால் அவர் வீடு வாங்கி கொடுக்கவில்லை.

இதையடுத்து சந்திரகாந்த் பணத்தை திருப்பி கேட்டார். விஷ்ணு பாட்டீல் ரூ.7 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்து இருக்கிறார். மீதி ரூ.5 லட்சத்தை கொடுக்கவில்லை.

அந்த பணத்தை கேட்டு சந்திரகாந்த் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். இதனால் அவரை தீர்த்து கட்ட விஷ்ணு பாட்டீல் திட்டம் திட்டினார். இதற்காக அந்த பகுதியை சேர்ந்த மெக்கானிக் மோனு ஹரி(20) என்பவரின் உதவியை நாடினார். கொலை சதிக்கு அவரும் ஒப்புக்கொண்டதால், கடந்த திங்கட்கிழமை அன்று விஷ்ணு பாட்டீல் தனது காரில், சந்திரகாந்த் தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வரும் வழியில் காத்து நின்றார்.

சிறிது நேரத்தில் சந்திரகாந்த் மகனுடன் அங்கு வந்தார். அப்போது, விஷ்ணு பாட்டீல் இருவரையும் வீட்டில் கொண்டுபோய் விடுவதாக கூறி காரில் ஏற்றினார். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு காரை ஓட்டிச்சென்றார். அங்கு சந்திரகாந்தை, மெக்கானிக் மோனு ஹரி பிடித்து கொள்ள விஷ்ணு பாட்டீல் அவரது முகத்தில் ‘செல்லோடேப்’பை சுற்றினார்.

மேலும் கை, கால்களையும் கட்டிப்போட்டார். இதனால் அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்து போனார். இதை பார்த்து ஹர்ஷ் கதறியிருக்கிறான். அவனை விட்டால் தங்களை காட்டி கொடுத்து விடுவான் என கருதிய இருவரும் அவனையும் விட்டு வைக்கவில்லை.

ஹர்ஷின் முகத்தையும் ‘செல்லோடேப்’பால் சுற்றி மூச்சை திணறடிக்க செய்து கொன்றனர். பின்னர் உடல்களை காரில் ஏற்றி ஹர்ஷ் உடலை குளத்திலும், சந்திரகாந்த் உடலை சாக்கடையிலும் வீசிவிட்டு சென்றுவிட்டனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தன.

இதையடுத்து போலீசார் விஷ்ணு பாட்டீலை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் மோனு ஹரியும் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்