கள்ளக்காதலியின் மகனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

கள்ளக்காதலியின் மகனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;

Update: 2017-09-28 23:34 GMT

தானே,

தானே மும்ராவை சேர்ந்தவர் பாத்திமா. கணவரை பிரிந்து 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், பாத்திமாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர் இஸ்மாயில்(வயது25) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது பாத்திமாவின் 4 வயது மகன் ரிஸ்வான் அழுதுகொண்டே இருந்தான்.

இதனால் எரிச்சல் அடைந்த அமிர் இஸ்மாயில், அவனை காலால் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கினார். இதில், அவன் வேதனை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாத்திமா மகனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்து போனான். இது குறித்து மும்ரா போலீசார் வழக்கு பதிவு செய்து, அமிர் இஸ்மாயிலை கைது செய்தனர். அவர் மீது தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவருக்கு எதிராக 13 பேர் சாட்சியம் அளித்ததனர்.

இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளி அமிர் இஸ்மாயிலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்