விசைத்தறி உரிமையாளர், மகளை கொன்ற 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவை அருகே விசைத்தறி உரிமையாளரையும், அவரது மகளையும் கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில்,

Update: 2017-09-28 23:30 GMT
கோவை,

3 பேருக்கு கோவை சிறப்பு கோர்ட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது. மேலும் அவர்கள் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் சூலூர் குமாரபாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராக்கியப்பன் (வயது 55), விசைத்தறி உரிமையாளர். அவருடைய மனைவி சரோஜினி (50). இவர்களுடைய மகள்கள் வனிதா (26), உஷா (23).

ராக்கியப்பனின் விசைத்தறி கூடத்தில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கருப்புக்கட்டி என்ற கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (22) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் உதயகுமார், ரூ.50 ஆயிரம் முன்பணம் வழங்குமாறு ராக்கியப்பனிடம் கேட்டார். அதற்கு அவர், உடனடியாக பணம் தர முடியாது. எனவே 3 மாதங்கள் கழித்து பணம் கொடுப்பதாக கூறினார்.

இதன் பின்னர் உதயகுமார் தனது ஊரைச்சேர்ந்த பரமசிவன் (25), புளியங்குடியை சேர்ந்த அப்துல்காதர் (26) என மேலும் 2 பேரை ராக்கியப்பனின் விசைத்தறி கூடத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். அவர்களின் வேலையில் ராக்கியப்பனுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து அவர் உதயகுமார், பரமசிவன், அப்துல்காதர் ஆகியோரை வேலையில் இருந்து செல்லும்படி கூறினார்.

அதன் பின்னர் கடந்த 24.12.2014 அன்று இரவு 8.15 மணிக்கு ராக்கியப்பனின் வீட்டுக்கு உதயகுமார், பரமசிவன், அப்துல்காதர் ஆகியோர் சென்றனர். அங்கு ராக்கியப்பனிடம் ரூ.50 ஆயிரம் கொடுக்கும்படி உதயகுமார் மீண்டும் வாக்குவாதம் செய்தார். பணம் தர முடியாது. நீங்கள் 3 பேரும் வேலையில் இருந்து நின்று கொள்ளுங்கள் என ராக்கியப்பன் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உதயகுமார் ‘பணமும் கிடையாது, வேலையும் இல்லையா?’ என்று கூறி சத்தம் போட்டார். தொடர்ந்து ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் ராக்கியப்பனை சரமாரியாக கத்தியால் குத்தினார். உடன் வந்த பரமசிவன், அப்துல்காதர் ஆகியோரும் கத்தியால் குத்தினார்கள்.
சத்தம் கேட்டு அங்கு வந்த மகள் வனிதா, ராக்கியப்பன் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதை பார்த்து அலறினார். வனிதாவையும் அவர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். அலறல் சத்தம் கேட்டு ராக்கியப்பனின் மனைவி சரோஜினி, இளைய மகள் உஷா ஆகியோர் ஓடிவந்தனர். அவர்கள் ராக்கியப்பன், வனிதா ஆகியோர் குத்துபட்டு ரத்தவெள்ளத்தில் கிடப்பத்தை பார்த்து கூச்சலிட்டனர். அவர்கள் இருவருரையும், அவர்கள் கத்தியால் குத்தினர். இதில் அனைவரும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

ராக்கியப்பனின் வீட்டுக்குள் இருந்து பலத்த சத்தம்கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டதால் வீட்டுக்குள் இருந்த உதயகுமார், பரமசிவன், அப்துல்காதர் ஆகியோர் 3 பேரும் கத்தியை காட்டியபடியே வெளியே வந்து அங்கு தயாராக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ராக்கியப்பனின் குடும்பத்தினர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராக்கியப்பனும், வனிதாவும் பரிதாபமாக இறந்தனர். ராக்கியப்பனின் மனைவி சரோஜினி, இளைய மகள் உஷா ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த இரட்டைக்கொலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று குமாரபாளையத்தில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. சூலூர் போலீசார் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உதயகுமார், பரமசிவன், அப்துல்காதர் ஆகியோரை கொலை நடைபெற்ற 2 நாட்களில் 26.12.2014 அன்று பள்ளப்பாளையம் பகுதியில் கைது செய்தனர்.

இந்த வழக்கு, கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். இரட்டைக்கொலை தொடர்பாக 16 பேர் கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். கொலை தொடர்பான 36 தடயங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.குணசேகரன், இரட்டைக்கொலை குற்றத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மேலும் 2 பேரை கொல்ல முயற்சி செய்ததற்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வீதம் 20 ஆண்டு சிறை தண்டனையும், வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து குற்றத்தில் ஈடுபட்டதற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், இந்த தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தந்தை மற்றும் மகளை கொன்ற இரட்டை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையுடன், 30 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்