கடன் தொல்லை காரணமாக கூவம் ஆற்றில் குதித்து தொழில் அதிபர் தற்கொலை
கடன் தொல்லை காரணமாக கூவம் ஆற்றில் குதித்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை,
சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 52). பர்னிச்சர் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன் பெய்த கன மழையில் மூழ்கி அவரது கடையில் இருந்த பர்னிச்சர் பொருட்கள் எல்லாம் நாசம் ஆகின.
பின்னர் மோகன்குமார், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி வெள்ளத்தால் இழந்த பர்னிச்சர் தொழிலை மீண்டும் செய்ய ஆரம்பித்தார். ஆனால் மோகன்குமாருக்கு வந்த வருமானம் அவரது கடன் தொகைக்கு வட்டி செலுத்தவே சரியாக இருந்தது. இதனால் பர்னிச்சர் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மீண்டும், மீண்டும் கடன் வாங்கினார்.
தற்கொலை
ஒரு கட்டத்தில் கடனுக்கு வட்டி செலுத்த கூட வருமானம் இல்லாத நிலைக்கு மோகன்குமார் இருந்து வந்தார். இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் மோகன்குமாரின் வீட்டிற்கு வந்து அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த மோகன்குமார் நேற்று மாலை கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதை பார்த்த பாலத்தில் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த கோட்டூர்புரம் போலீசார், சைதாப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மோகன்குமாரின் உடலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.