கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது
கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.;
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 100 வளர்ப்பு கன்று குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. இதை பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விலைபேசி பிடித்து சென்றனர்.
நேற்று நடந்த சந்தைக்கு கோவை, கரூர், மதுரை, நாமக்கல், தேனி, ராஜபாளையம், சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
ரூ.36 ஆயிரம்...
இதில் 300 பசுமாடுகள், 250 எருமை மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.32 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.36 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
திருவண்ணாமலை, ஆத்தூர், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், மராட்டியம், கேரளா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.
பசுந்தீவனம்
இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறும்போது, ‘ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வழக்கமாக 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் எளிதில் கிடைக்கிறது.
இதனால் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதன்காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து விட்டது. இன்று (அதாவது நேற்று) 550 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது’ என்றார்.