மழை பெய்வதற்கு மரக்கன்றுகளை அதிகமாக நட வேண்டும் கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்

மழை பெய்வதற்கு மரக்கன்றுகளை அதிகமாக நட வேண்டும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.;

Update: 2017-09-14 22:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொழிவு குறைந்து கொண்டே வருகிறது. நகர்மயமாதல் விளைவாகவும், பருவமழை குறைந்துகொண்டே வருவதன் விளைவாகவும் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை மழை அளவு குறைந்து உள்ளது. பயிர்களின் வளர்ச்சியை மரங்களின் நிழல் பாதித்துவிடும் என்று மரங்கள் வெட்டப்பட்டன. இதேபோல் சில காரணங்களால் மரங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.

எனவே மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மழை பொழிவை பெறுவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை அதிகமாக நட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களின் எல்லைகள், ஏரிக்கரைகள், அரசுக்கு சொந்தமான இடங்கள், பள்ளிக்கூடங்கள், சாலையோரம் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும்.

பராமரிப்பு

மரக்கன்றுகளை நட்டு வைப்பதோடு விட்டுவிடாமல் ஆடு, மாடுகள் மேயாமல் இருக்க வேலி அமைத்து பராமரிக்க வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், மாணவ-மாணவிகள் என அனைவரும் இந்த பணியில் ஈடுபட வேண்டும். மரக்கன்றுகள் தேவைப்படுபவர்கள் வனத்துறை மூலம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். சமீபத்தில் தூர்வாரப்பட்ட ஏரிகள், குளங்களின் கரைகளில் நமது பாரம்பரிய பனை மரக்கன்றுகளை நட முயற்சி மேற்கொள்ளலாம். எனவே தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி மரங்களை வளர்க்க நாம் முன்வரவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்