நியமன எம்.எல்.ஏ.க்கள் புகார் எதிரொலி: தலைமை செயலாளர் மாற்றப்படுவாரா?
நியமன எம்.எல்.ஏ.க்களின் புகார் எதிரொலியாக தலைமை செயலாளர் மாற்றப்படுவரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.;
புதுச்சேரி,
புதுவை தலைமை செயலாளராக மனோஜ் பரிதா பணியாற்றி வருகிறார். இவரது நடவடிக்கை தொடர்பாக கவர்னர் கிரண்பெடி அடிக்கடி குற்றஞ்சாட்டி வந்தார். சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சித்தார்.
இந்தநிலையில் டெல்லி சென்று இருந்த பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளரின் நடவடிக்கை குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் புகார் தெரிவித்தனர். நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதம் தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்கள்.
மாற்றப்படுவாரா?
புதுவை அரசை தவறான பாதையில் வழிநடத்தும் அவரை மாற்ற வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.
கவர்னர் கிரண்பெடி, நியமன எம்.எல்.ஏ.க்கள் என தொடர்ச்சியாக தலைமை செயலாளர் மீது மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளனர். எனவே புதுவை தலைமை செயலாளர் விரைவில் மாற்றப்படுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.