விவசாயத்திற்காக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறப்பு

விவசாயத்திற்காக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2017-09-14 21:00 GMT
மைசூரு,

விவசாயத்திற்காக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடகத்தில் இம்முறை பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பி உள்ளன. மேலும் ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன. பலத்த மழை காரணமாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கர்நாடகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாக கருதப்படும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அந்த அணை தற்போது 100 அடியை தாண்டி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 104.03 அடி ஆகும். அணைக்கு வினாடிக்கு 5,396 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9,841 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் கொள்ளளவு 124.80 அடி ஆகும்.

கால்வாய்களில் தண்ணீர் திறப்பு

இதில் குறிப்பாக அணையில் இருந்து விவசாயத்திற்காக வி.சி. கால்வாய், வருணா கால்வாய், வலது மற்றும் இடது கால்வாய்கள், விரிஜா கால்வாய், தேவராயா கால்வாய் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதுகுறித்து காவிரி நீர்ப்பாசன அதிகாரி பசவராஜேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை 100 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு தற்போதும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தற்போது விவசாயத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்கு தொடர்ந்து கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்