குறைந்தபட்ச கூலி திட்டத்தை அமல்படுத்த கோரி பெங்களூருவில் தொழிலாளர்கள் ஊர்வலம்

குறைந்தபட்ச கூலி திட்டத்தை அமல்படுத்த கோரி தொழிலாளர்கள் பெங்களூருவில் ஊர்வலம் நடத்தினர்.

Update: 2017-09-14 21:30 GMT
பெங்களூரு,

குறைந்தபட்ச கூலி திட்டத்தை அமல்படுத்த கோரி தொழிலாளர்கள் பெங்களூருவில் ஊர்வலம் நடத்தினர்.

தொழிலாளர்கள் ஊர்வலம்

தொழிலாளர்களின் உரிமைகளை பலப்படுத்த வேண்டும், உரிமைகளை பாதுகாக்க வேண்டும், குறைந்தபட்ச கூலி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிலாளர் சங்கம்(சி.ஐ.டி.யூ.) உள்பட பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஊர்வலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் சேஷாத்திரி ரோடு வழியாக சுதந்திர பூங்கா வரை சென்றது. இந்த ஊர்வலத்தில் மத்திய-மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுதந்திர பூங்காவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவி வரலட்சுமி பேசியதாவது:-

குறைந்தபட்ச கூலி திட்டம்

குறைந்தபட்ச தினக்கூலிரூ.700 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும், குறைந்தபட்ச கூலி தொழில் பிரிவில் உள்ள 84 மண்டலங்களுக்கும் ஒரே நேரத்தில் கூலியை மாற்றி அமைக்க வேண்டும். குறைந்தபட்ச கூலி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் அரசு உணவு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் மத்திய-மாநில அரசுகள் இதை கண்டுகொள்ளவில்லை. மாநில அரசு தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மறுவாழ்வு வழங்க வேண்டும்

ஒப்பந்தம் முறையை ரத்து செய்துவிட்டு அனைத்து துறைகளிலும் நிரந்தர தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடு மற்றும் வீட்டுமனைகளை இலவசமாக வழங்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி, ‘ஆசா‘ சுகாதார ஊழியர்கள், சத்துணவு திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு வரலட்சுமி பேசினார். 

மேலும் செய்திகள்