மது குடித்ததை தட்டிக்கேட்டதில் தகராறு: போலீஸ்காரர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
பழைய குற்றாலம் அருவி பகுதியில் மது குடித்ததை தட்டிக் கேட்ட போலீஸ்காரர் உள்பட 2 பேர் தாக்கப்பட்டனர்.
தென்காசி,
பழைய குற்றாலம் அருவி பகுதியில் மது குடித்ததை தட்டிக் கேட்ட போலீஸ்காரர் உள்பட 2 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
மது குடித்தனர்திண்டுக்கல் அருகே உள்ள கக்கன்நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கிலிசாமி மகன் பாரதி முருகன் (வயது 47). இவர் அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் ஆவார். இவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தார்.
அவர்கள் பழைய குற்றாலம் அருவி பகுதியில் வாகனம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்த மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரர் பழனிவேல், ஏட்டு பாலமுருகன் ஆகியோர் அவர்களை கண்டித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
3 பேர் கைதுஉடனே ஆயிரப்பேரியைச் சேர்ந்த மாசானம் மகன் சங்கர் (36) மற்றும் அங்குள்ள கடைக்காரர்கள், மது குடித்தவர்களை கண்டித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பாரதி முருகன் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீஸ்காரர் பழனிவேல் மற்றும் சங்கர் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ்காரர் உள்பட 2 பேரை தாக்கியது தொடர்பாக பாரதி முருகன், அவருடன் வந்த சரவணன், சேகர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைதான சரவணன், தோடந்தூர் பகுதியில் அ.தி.மு.க. நகர இளைஞர் அணி செயலாளராகவும், சேகர், பாரதிபுரம் பகுதியில் அ.தி.மு.க. வார்டு செயலாளராகவும் உள்ளதாக தெரிகிறது.