ஓடும் லாரியில் இருந்து டீசல் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு

ஓடும் லாரியில் இருந்து டீசல் டேங்க் கழன்று விழுந்து, சாலையில் டீசல் கொட்டியது. இந்த டீசலில் மோட்டார் சைக்கிள் சிக்கி சறுக்கி விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.;

Update:2017-09-15 04:15 IST
களியக்காவிளை,

களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை குழித்துறையை சேர்ந்த வேணு (வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். படந்தாலுமூடு பகுதியில் சென்ற போது லாரியின் டீசல் டேங்க் திடீரென அலேக்காக கழன்று சாலையில் விழுந்தது.

இதனால் டேங்க் உடைந்து அதிலிருந்து டீசல் வெளியேறி சாலையில் கொட்டியது. அப்போது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் டீசலில் சிக்கி சறுக்கியபடி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் தண்ணீரை பீய்ச்சியடித்து டீசலை அகற்றினர். மேலும் இந்த சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் லாரியில் இருந்து டீசல் டேங்க் கழன்று விழுந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சறுக்கி விழுந்த சம்பவம் படந்தாலுமூடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்