‘நீட்’ தேர்வை சில அரசியல் கட்சியினர் சுயலாபத்திற்காக எதிர்க்கின்றனர் இல.கணேசன் எம்.பி. பேட்டி

‘நீட்‘ தேர்வை சில அரசியல் கட்சியினர் சுயலாபத்திற்காக எதிர்க்கின்றனர் என்று மயிலாடுதுறையில் இல.கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2017-09-14 23:00 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாகட்டத்தில் கடந்த 12-ந் தேதி காவிரி மகாபுஷ்கர விழா தொடங்கியது. நேற்று பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி., துலாகட்டத்தில் புனிதநீராடினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய மக்களுக்கு பல அம்சங்களில் பாரம்பரிய மிக்க பண்பாடு உள்ளது. அதில் ஒன்றுதான் தீர்த்த யாத்திரை. கும்பமேளா விழாவில் எந்தவித விளம்பரமும் செய்யாமல் 1 கோடி பேர் கலந்து கொண்டனர். அதேபோல் கும்பகோணம் மகாமக விழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனிதநீராடினர். தற்போது மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி வருகின்றனர். நாகை மற்றும் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் விழாவிற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறது. காவிரி ஆற்றில் நிரந்தரமாக நீர் செல்ல நதிநீர் இணைப்புதான் ஒரே தீர்வு ஆகும்.

மயிலாடுதுறை ஒரு ஆன்மிக தலமாகும். இதனை சுற்றி நவக்கிரக மற்றும் பாடல் பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. இதனால் மயிலாடுதுறையை ஒரு சுற்றுலா தலமாக்க அரசு முயற்சிக்க வேண்டும். நான், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறைக்கு உறுப்பினராக உள்ளேன். அதனால் மயிலாடுதுறையை சுற்றுலா தலமாக்க முயற்சி மேற்கொள்வேன். தற்போது மயிலாடுதுறை வழியாக இயக்கப்பட்டு வரும் ராமேஸ்வரம்-அயோத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பேன்.

‘நீட்‘ தேர்வை சில அரசியல் கட்சியினர் சுயலாபத்திற்காக எதிர்க்கின்றனர். அது குறித்து விவரம் தெரிந்தவர்கள் ஆதரிக்கிறார்கள். தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆட்சி காலத்தில் தான் தொடங்க திட்டமிடப்பட்டது.

சேதுசமுத்திர திட்டத்தை வாஜ்பாய் தான் முதன் முதலில் அறிவித்தார். அந்த திட்டம் தேவையானது. ஆனால், அந்த திட்டத்தால் ராமர் பாலம் பாதிக்கப்படக் கூடாது. ஜி.எஸ்.டி. வரியால் நன்மைகள் அதிகமாக கிடைத்துள்ளன. அந்த திட்டத்தை செயல்படுத்தும் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதியாக ஒருவர் தான் இருப்பார். ஆனால், அதில் மாநில அரசுகளின் சார்பில் பல பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். காவிரியில் தடுப்பணை கட்ட கட்சி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பக்குவமாக பேச வேண்டும். அவர், தமிழக சட்டசபையை கூட்டுவதற்கும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கும் கவர்னருக்கு கெடு வைப்பது மரபு மீறிய செயலாகும். கருணாநிதியிடம் இருந்து மு.க.ஸ்டாலின் இன்னும் அதிகமாக கற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது விழா குழு ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி சுப்பிரமணியன், பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்