கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணர் வேடம் அணிந்து உறியடித்த இளைஞர்கள்

தூத்துக்குடியில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணர் வேடம் அணிந்து இளைஞர்கள் உறியடித்தனர்.

Update: 2017-09-14 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணர் வேடம் அணிந்து இளைஞர்கள் உறியடித்தனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழா

தூத்துக்குடி மேலூர் பங்களா தெரு கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி காலையில் கிருஷ்ணருக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று மாலை உறியடித்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதனால் தூத்துக்குடி பங்களாத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் ஆங்காங்கே வீடுகளின் முன்பு உறிகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த உறிகளுக்குள் பணமுடிப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.

உறியடித்தனர்

இதைத்தொடர்ந்து கிருஷ்ணர் வேடம் அணிந்த இளைஞர்கள் ஒவ்வொரு உறியாக அடிக்க தொடங்கினர். தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு செல்வ விநாயகர் கோவில் அருகே உள்ள உறியை முதலில் அடித்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்தவர்கள் உறியடித்தவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இறுதியில் அனைத்து பகுதியிலும் உள்ள உறிகளை அடித்தனர். இரவில் மேலூர் பங்களா தெருவில் அமைக்கப்பட்டு இருந்த வழுக்குமரத்தில் கிருஷ்ணர் வேடம் அணிந்த இளைஞர்கள் ஏறினர். நிகழ்ச்சியை திரளானவர்கள் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்