நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ்– தி.மு.க.வுடன் இணைந்து போராடும் முதல்–அமைச்சர் உறுதி

நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் இணைந்து போராடும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

Update: 2017-09-14 00:00 GMT

புதுச்சேரி,

புதுவையில் நீட் தேர்விற்கு நிரந்தர தடை கோரியும், மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்தும், புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது.

இந்த போராட்டத்திற்கு தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் அரசின் கொள்கை. தேசிய அளவில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பாடத்திட்டத்தில் இருந்து இன்னொரு பாடத்திட்டத்தில் படிப்பது அவ்வளவு சுலபமல்ல. இதனால் கடந்த ஆண்டு விலக்கு கேட்டு பெற்றோம்.

இந்த ஆண்டு நீட்டில் விலக்கு தரக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். மேலும் சட்ட வரையறை தயாரித்து அனுப்பினோம். இவை இரண்டும் மத்திய அரசில் தூங்கி கொண்டுள்ளது. நீட்டிற்கு விலக்கு அளிக்க நானும், அமைச்சர்களும் நேரடியாக மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்தோம். முதலில் சட்டத்தை ஆராய்ந்து தெரிவிப்பதாக கூறினர். இரண்டாவதாக கேட்டபோது சட்டத்தில் இடமில்லை என கூறிவிட்டார்.

இதனால் வேறு வழியின்றி அனைத்து கட்சி தலைவர்களுடனும், எம்.எல்.ஏ.க்களுடனும் ஆலோசனை நடத்தி நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தினோம். புதுச்சேரி அரசுக்கு கல்லூரிகளில் தான் இட ஒதுக்கீடு பெற்று மாணவர்களை சேர்க்கும் அதிகாரம் உள்ளது. அதன்படி மணக்குள வினாயகர், பிம்ஸ், வெங்கடேஸ்வரா ஆகிய தனியார் கல்லூரிகளிலும், அரசு மருத்துவ கல்லூரியிலும் உள்ள 600 இடத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிகளவில் இடம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை எடுத்தோம். மொழிவாரி, மதவாரி கல்லூரிகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு இடம் கிடைக்கச் செய்தோம். இதனால் மொத்தம் உள்ள 600 இடங்களில் 505 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைத்தது.

புதுச்சேரியில் முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கட்சிகளுடன் காங்கிரஸ் ஒன்றுபட்டு உள்ளது. அதேசமயம் இதற்கு முழுமையான தீர்வு கல்வி மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இதற்காக மிகப்பெரிய அளவில் போராட வேண்டும். மத்திய அரசு சட்டம் ஏற்றினால் மாநில அரசு கடைபிடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். நீட் தேர்வை ரத்து செய்ய மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து செயல்படுகிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை காங்கிரஸ் தி.மு.க.வுடன் இணைந்து போராடும்.

மத்திய அரசு மதவாத, பிரிவினைவாத அரசாக உள்ளது. பிரதமர் மோடி மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காமல், நினைப்பதை செய்து கொண்டுள்ளார். பண மதிப்பு இழப்பால் மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அந்த திட்டத்தை கொண்டுவரும்போதே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றார். அதுபோல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பையும் பிரதமர் தான் ஏற்க வேண்டும்.

காங்கிரஸ் அனைத்து பொருட்களுக்கும் ஒரே மாதிரியான வரி அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டுவர முயற்சித்தது. ஆனால் பா.ஜ.க. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 24 சதவீதம், 28 சதவீதம் என 5 வகைகளில் வரி விதிப்பை கொண்டுவந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் அனைத்து மாநிலத்திலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல நிலைகளில் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ.பேசியதாவது:–

தமிழர்களிடம் எதிர்க்கும் உணர்வு குறைந்துள்ளதால் எதையும் செயல்படுத்தலாம் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு வந்துள்ளது. நீட் தேர்வு கொண்டுவந்துள்ளதன் மூலம் தமிழர்களின் மொழி உரிமை, கலாசார உரிமை பறிக்கப்படுகிறது. மாநில உரிமைகளில் மத்திய அரசு கை வைக்கிறது. இதனால் மாணவி அனிதா மரணம் அடைந்துள்ளார். அவரது உயிர் இழப்பால் ஏற்பட்டுள்ள எழுச்சியை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆதிதிராவிடர்களுக்கு உயர்கல்வியை இலவசமாக வழங்கும் கோப்பிற்கு அனுமதி தராமல் புதுச்சேரி மக்களின் வாழ்வுரிமையில் கவர்னர் கை வைக்கின்றார். அனுமதி தரவில்லை என்றால் கொதித்து எழுந்து கவர்னர் மாளிகையின் வாசலில் அமர்ந்து தி.மு.க. போராடும். இதற்காக சிறைக்கு சென்றாலும் பயப்பட மாட்டோம். தி.மு.க.வினருக்கு சிறைக்கு செல்வது ஒன்றும் புதிதல்ல. உரிமைக்காக போராடி சிறைக்கு செல்வதை பெருமையாக கருதுவோம். நாங்கள் கோழைகள் அல்ல. வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். இதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நாரா. கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மனித நேய மக்கள் கட்சி பஷீர் அகமது, திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி, மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்